ஓட்டவா: இந்தியா - கனடா மோதல் விவகாரத்தில் தற்போது அமெரிக்கா மூக்கை நுழைத்து உள்ளது. இந்தியாவிற்கு எதிரான விசாரணையில் அமெரிக்காவின் உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இந்தியா - கனடா மோதல் 24 மணி நேரத்தில் உச்சம் பெற்றுள்ளது. இரண்டு நாட்டு அரசுகளும் எதிர் நாட்டின் தூதரகத்தை சேர்ந்த சீனியர் நிர்வாகி ஒருவரை தங்கள் நாட்டில் இருந்து வெளியே அனுப்பி உள்ளது. இதில் உடனடியாக சமாதானம் ஏற்படும் அறிகுறிகள் தெரியவில்லை.
சமாதானம் ஏற்படாத பட்சத்தில் இரண்டு நாட்டு உறவு முறியும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கனடாவில் இருக்கும் லட்சோப லட்சம் பேர் பாதிக்கப்படலாம். அதோடு கனடாவுடன் மோதலால் கனடாவிற்கு நெருக்கமான அமெரிக்கா,ஆஸ்திரேலியா , பிரான்ஸ், யுகே என்றுய் மேற்குல நாடுகளின் உறவும் முறியும் வாய்ப்புகள் உள்ளன.
என்ன மோதல்?: சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.
இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.