கம்பாலா, அக்டோபர்.23-
உகாண்டாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 46 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடானா உகாண்டாவில் கம்பாலா-குலு நெடுஞ்சாலை, அந்நாட்டின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். இந்தச் சாலையில் எதிரெதிர் திசைகளில் சென்ற இரண்டு பேருந்துகள், முன்னே சென்ற லாரி, கார் ஆகிய 2 வாகனங்களை முந்திச் செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டது.
இரண்டு பேருந்துகளும் மோதிக் கொண்டதில், அருகில் சென்ற மற்ற வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கின. இதில் பேருந்தில் பயணித்த 46 பேர் உயிரிழந்தனர். மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் காயமடைந்தனர். முதலில், இந்த விபத்தில், 63 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது. உகாண்டாவில், கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 5,144 பேர் உயிரிழந்தனர்.








