சிங்கப்பூர், செப்டம்பர்.25-
போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக இன்று பிற்பகலில் தூக்கிலிடப்பட்ட ஒரு மலேசியப் பிரஜையான தட்சணாமூர்த்தி காத்தையா, தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் வழங்கப்பட்டதாக சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் தடுப்பு வாரியம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 11 ஆண்டு காலமாக சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டது. 39 வயதுடைய தட்சணாமூர்த்திக்கு மரணத் தண்டனை உறுதிச் செய்யப்பட்டப் பின்னர் ஆகக் கடைசி வாய்ப்பாக சிங்கப்பூர் அதிபரின் பொது மன்னிப்பு கோரும் கருணை மனுவிற்கும் அவர் விண்ணப்பித்தார்.
அந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் சட்ட அமலாக்கத்திற்கு ஏற்ப தட்சணாமூர்த்திக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூருக்குள் தட்சணாமூர்த்தி கடத்தி வந்த போதைப் பொருளின் அளவு ஒரு வாரத்திற்கு சுமார் 540 பேருக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு வாரியம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.