மாஸ்கோ: அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் தற்காத்து கொள்வது எப்படி என்று ரஷ்யா, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுக்க திட்டமிட்டுள்ளது. உக்ரைன் இடையேயான மோதலுக்கு மத்தியில் ரஷ்யாவின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. ஆனால், ரஷ்யாவே எதிர்பார்க்காத அளவுக்கு உக்ரைன் போரில் கடும் சவால் கொடுத்தது. இதனால், உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவும் தவிடுபொடியானது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவதால் ரஷ்யாவுக்கு சரிசமமாக உக்ரைன் மல்லுக்கட்டி வருகிறது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் இறையாண்மையை காக்க அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என ஒருபக்கம் ரஷ்யா கூறி வருகிறது.
ஜெர்மனியின் லீக் டாக்குமெண்ட்: இதற்கிடையே, ரஷ்ய இராணுவத்தில் சேரும் வெளிநாட்டு நபர்களுக்கு ரஷ்ய குடியுரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டினரையும் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்க புதின் ஆர்வமாக உள்ளது தெரிகிறது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து, குறிப்பாக ஜெர்மனியில் இருந்து கசிந்த பாதுகாப்பு ஆவணங்கள் சர்வதேச பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.