மாஸ்கோ: ரஷ்யாவில் நடிகை ஒருவர் லைவ் ஷோவில் இருக்கும் போதே தாக்குதலில் உயிரிழந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த நடிகை பரிதாபமாக உயிரிழந்தார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்தாண்டு போர் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே பல காலமாக மோதல் இருந்து வந்த நிலையில், திடீரென கடந்தாண்டு முழு வீச்சில் போரை ஆரம்பித்தது.
இதில் ஆரம்பத்தில் ரஷ்ய ராணுவம் ஆதிக்கம் செலுத்திய போதிலும், அதன் பிறகு இந்தப் போர் ரஷ்யா கையை விட்டுச் சென்றுவிட்டது. அப்போது முதல் இரு தரப்பிற்கும் இடையே சண்டை தொடர்ந்தே வருகிறது.
ஏவுகணை தாக்குதல்: இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருக்கும் ஃபரண்ட் லைன் பகுதியில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள குமாச்சோவ் என்ற பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் கிராமத்தில் இருந்த பள்ளி மற்றும் கலாச்சார மையம் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தில் இருந்து எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து தகவல்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்து கொள்ளவில்லை.