Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இப்ராஹிம் இஸ்கந்தர்.. மலேசியாவின் புதிய மன்னராக பதவியேற்பு! யார் இவர்?
உலகச் செய்திகள்

இப்ராஹிம் இஸ்கந்தர்.. மலேசியாவின் புதிய மன்னராக பதவியேற்பு! யார் இவர்?

Share:

கோலாலம்பூர்: மலேசியா நாட்டின் அதிகாரப்பூர்வமாக பிரதமர் இருந்தாலும், அங்கு இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது. இந்நிலையில், தற்போது சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் மலேசியாவின் 17வது மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 1957ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து மலேசியா சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட்டு, மக்கள் வாக்களித்து புதியதாக பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும் அங்கு மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது. முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, மலேசியா நாட்டின் ஆயுதப்படைகளின் தளபதி என பல்வேறு பொறுப்புகளில் மன்னர் இருக்கிறார்.

இந்நாட்டின் நீதிமன்றங்கள், காவல்துறை, சட்டத்துறை ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்நிலையில் நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரும் இவரது குடும்பமும் சிங்கப்பூரில் நிலம் மற்றும் பாமாயில், ரியல் எஸ்டேட் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளை கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.47 ஆயிரம் கோடி.

மலாய்-பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம், மலேசியாவில் தனியார் ராணுவம் ஒன்றையும் வழிநடத்துகிறார். தான் பதவியேற்றுக்கொண்டது குறித்து கூறிய அவர், "நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன், ஆனால் அவர்கள் தவறாக ஏதாவது செய்கிறார்கள் என்று நினைத்தால் அது குறித்து எச்சரிப்பேன்" என்று கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க மன்னரின் தலையீடு தேவைப்பட்டது. சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் கடந்த காலங்களில் ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஜோகூர் நகரத்தை சுற்றி ஏழைகளுக்கு உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News