தமிழ்நாடு, செப்டம்பர்.30-
தமிழகம், கரூரில் தமிழக வெற்றிக் கழகக் கட்சித் தலைவர் விஜய், கடந்த 27 ஆம் தேதி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இது குறித்து இன்று செப்டம்பர் 30ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், என் வாழ்க்கையில் இப்படி வலியான சூழ்நிலையைச் சந்தித்ததில்லை. மனம் முழுக்க வலி… வலி மட்டும்தான். இந்தச் சுற்றுப் பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகிறார்கள். அதற்கு அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும் மட்டும்தான் காரணம். அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அதனால் தான் இந்தச் சுற்றுப்பயணத்தில் மற்ற விஷயங்களை விட மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருந்துவிடக் கூடாது என்பது தான் என் மனதில் ஆழமாக இருக்கும்.
அதன் காரணமாகத்தான் அரசியலை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு, மக்களின் பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்து இடங்களைத் தேர்வு செய்து, காவல்துறையிடம் அனுமதி கேட்கிறோம். ஆனால் நடக்கக்கூடாதது நடந்து விட்டது. நானும் மனிதன் தானே என்று விஜய் மிக உருக்கமாக விவரித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். கூடிய விரைவில் உங்க அனைவரையும் நான் சந்திக்கிறேன்.
அதே வேளையில் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள், என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்று விஜய் அந்த வீடியோவில் மிக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.