டெஹ்ரான், ஜூலை.26-
ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். ஈரானின் ஜஹேதானில் உள்ள நீதித்துறை கட்டடத்தின் மீது ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாதிகள் திடீரென சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே எண்மர் மாண்டனர். மேலும் பலர் பலத்த காயமுற்றதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு, ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நீதிமன்றத்தைச் சுற்றி துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் சம்பவத்தை ஈரான் அதிகாரிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இது தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாதச் செயல். விசாரணைகள் நடந்து வருகின்றன. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.








