கோலாலம்பூர், நவம்பர்.23-
ஆபத்துகளை எதிர்கொள்ளும் ஆசியான் நாடுகளின் குரலை உலக நாடுகள் தீவிரமாக எடுத்துக் கொண்டு, அஃது உலகளாவிய இலக்குகளில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜி20 உச்சநிலை மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் என்பது நெருக்கடியின் போது மட்டும் அல்லாமல், முன்கூட்டியே முதலீடுகள் வழியாகவும் நிதியுதவிகள் மூலமும் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும், இதில் மாந்தநேயத்தை மையமாகக் கொண்ட எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பும் தொடக்க நிலை எச்சரிக்கை அமைப்புகளும் அவசியம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
"உலகளாவிய எரிசக்தி தேவையும், சுத்தமான தொழில்நுட்பத்தின் திறனும் இலக்குகளை அடைவதில் இன்னும் ஒத்திசைக்கவில்லை என்பதை நாம் மறைக்க முடியாது," என்று அவர் வெளிப்படையாகப் பேசினார். இதற்கு நேர்மையுடனும், நடைமுறை அணுகுமுறையுடனும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், கார்பன் தடத்தையும் அதன் தாக்கத்தையும் குறைக்கும் தொழில்நுட்பங்களில் மலேசியா தீவிரமாக முதலீடு செய்து வருவதாகவும் அறிவித்தார். வறுமை சுமக்காமல் மக்கள் அடையக்கூடிய உண்மையான எரிசக்தி மாற்றத்திற்காக, உலகிற்கு நீதியான காலநிலை நிதியியல் அமைப்பும் வளரும் நாடுகளை ஒதுக்கி வைக்காத உலகளாவிய கட்டமைப்பும் தேவை என்றும் அன்வார் உறுதியாகத் தெரிவித்தார்.








