சிங்கப்பூர், டிசம்பர்.04-
சிங்கப்பூரும் மலேசியாவும் கடந்த 60 ஆண்டுகளில் இரு தரப்பு ரீதியாகவும் வட்டார ரீதியாகவும் சாதித்தது குறித்து பெருமைப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், இன்று வியாழக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் நடைபெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த 60 ஆண்டுகளில் இரு நாடுகளும் இணைந்து சாதித்தது குறித்து பெருமைப்பட வேண்டும் என்றார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் 60 ஆண்டு கால அரசதந்திர உறவுகளைக் கொண்டாடும் மைல்கல்லைப் பாராட்டிய வோங், கடந்த காலச் சந்திப்புகளில் அன்வாருடனான ஈடுபாடுகளையும் நட்பையும் எப்போதும் மதிப்பதாகக் கூறினார்.
நாங்கள் நேர்மையான, ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்த முடிகிறது. மேலும் நெருங்கிய அண்டை நாடுகள், நல்ல நண்பர்கள் மற்றும் இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் இணைந்து என்ன சாதிக்க முடியும் என்பதில் நாங்கள் இருவரும் கவனம் செலுத்துகிறோம் என்று சிங்கப்பூர் ரிட்ஸ்-கார்ல்டன், மில்லினியா ஹோட்டலில் நடைபெற்ற 12வது சிங்கப்பூர்-மலேசியா தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பு நிகழ்ச்சியில் வோங் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளும் சுகாதார ஒத்துழைப்பு, போதைப் பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவது தொடர்பான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டன.
மேலும் ஜோகூர்-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து ரயில் இணைப்பான ஆர்டிஎஸ் தொடர்பான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டன.








