பேங்காக், செப்டம்பர்.24-
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ஒரு பெரிய சாலை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அவசர விசாரணைக்கு அந்நாட்டு பிரதமரும், உள்துறை அமைச்சருமான Anutin Charnvirakul, உத்தரவிட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை காலையில் பேங்காக், வஜிரா மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிப்பில் இருந்து வரும் புதிய எம்ஆர்டி பேர்பல் லின் பாதைக்கானக் கட்டுமானத் தளத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்றாலும், இந்த நிலச்சரிவு ஒரு போலீஸ் நிலையத்தைச் சேதப்படுத்தியது. அப்பகுதியில் வீற்றிருந்த மருத்துவமனையின் வெளிநோயாளிகள் சேவைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. எந்த காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று சம்பவம் நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்ட பிறகு பிரதமர் Anutin செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
வஜிரா மருத்துவமனையின் கட்டிடம் கட்டமைப்பு ரீதியாக உறுதியாக இருந்தாலும், அருகிலுள்ள ஐந்து மாடி சாம்சென் மெட்ரோபோலிடன் போலீஸ் நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடித்தளக் குவியல்களில் இரண்டு அல்லது மூன்று உடைந்துள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
அருகிலுள்ள வரிசை வீடுகளில் இருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகளும் குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பான தாய்லாந்து மாஸ் ரெபிட் டிரான்சிட் வாரியம் அனைத்து சேதங்களையும் மதிப்பிடுவதற்கும், இதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காட்டவும் பணிக்கப்பட்டுள்ளது.