கோலாலம்பூர், அக்டோபர்.26-
இந்தியா-ஆசியான் உச்சநிலை மாநாட்டில் காணொளி வாயிலாகக் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நிச்சயமற்ற உலகச் சூழலிலும், இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, உலகளாவிய நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான தூணாகத் திகழ்கிறது என்று வலியுறுத்தினார். உலக மக்கள் தொகையில் கால் பகுதியை இந்த இரு பிரிவுகளும் கொண்டிருக்கின்றன என்றும், புவியியல் நிலையிலான தொடர்பு மட்டுமல்லாமல், வரலாற்றுப் பிணைப்புகள், பொதுவான மதிப்புகள், ஆழமான வர்த்தக, கலாச்சார உறவுகளை இவை பகிர்ந்து கொள்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆசியானின் மையத்தன்மையும் Indo-Pasifik மீதான அதன் பார்வைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கிறது என்று மோடி உறுதிபடத் தெரிவித்தார். அத்துடன், மாந்தநேய உதவி, பேரிடர் மீட்பு, கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், 2026ஆம் ஆண்டை 'ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக' அறிவிக்கவும் அவர் முன்மொழிந்தார். இந்த விரிவான முதன்மை கூட்டாண்மை, நெருக்கடியான காலங்களில் ஆசியான் நண்பர்களுக்கு இந்தியா ஒரு பலமான துணையாக நிற்கும் என்பதைக் காட்டுவதாக மோடி மேலும் கூறினார்.








