செப்டம்பர் 03-
பிரிட்டனில் வேலை கிடைக்க உதவும் என்று மாணவர்களை நம்பவைத்து, அவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான பவுண்டுகளை வசூலித்தபின், அவர்களுக்குப் ‘பயனற்ற விசா ஆவணங்களை’ பெற்றுத்தந்து ஏமாற்றியுள்ளது உலகம் முழுவதும் செயல்படும் ஒரு நெட்வொர்க்.
ஆட்சேர்ப்பு முகவர்களாகச் செயல்படும் இடைத்தரகர்கள், உதவி தேவைப்படுபவர்களை (வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், காயமுற்றவர்கள்) பார்த்துக்கொள்ளும் சுகாதார பராமரிப்பு துறையில் வேலை தேடும் சர்வதேச மாணவர்களைக் குறிவைப்பதாக பிபிசி விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்களுக்காக மாணவர்கள் தலா 17,000 பவுண்டுகள் வரை கொடுத்துள்ளனர். பார்க்கப்போனால் இந்தச் சான்றிதழ்கள் இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டும்.
திறன்சார் தொழிலாளர் விசாவிற்கு அவர்கள் விண்ணப்பித்தபோது ஆவணங்கள் செல்லாது என்று கூறி, உள்துறை அமைச்சகத்தால் அவை நிராகரிக்கப்பட்டன.
தைமூர் ராஸா என்ற ஒரு நபர் 141 விசா ஆவணங்களை விற்றுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை எந்த மதிப்பும் இல்லாதவை. அவர் மொத்தம் 12 லட்சம் பவுண்டுகளுக்கு இந்த விசா ஆவணங்கள் விற்றதைக் காட்டும் கோப்புகளை பிபிசி பார்த்தது.
தான் எந்தத்தவறும் செய்யவில்லை என்று கூறும் அவர், அதில் ஒருபகுதித் தொகையை மாணவர்களிடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.
ராஸா வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் அலுவலகங்களை வாடகைக்கு எடுத்து, பணியாளர்களைப் பணியமர்த்தினார். டஜன் கணக்கான மாணவர்களுக்குப் பராமரிப்பு இல்லங்களில் வேலை மற்றும் வேலைவாய்ப்பு ஸ்பான்சர்ஷிப் போன்றவற்றைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
தான் முதலில் முறையான ஆவணங்களை விற்கத் தொடங்கியதாகவும், சில மாணவர்களுக்கு விசாக்கள் மற்றும் உண்மையான வேலைகள் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் பயனற்ற காகிதங்களுக்காகப் பலர் தங்கள் முழு சேமிப்பையும் இழந்திருக்கின்றனர்.