பெய்ஜிங், செப்டம்பர்.29-
உலகின் மிக உயரமான பாலம் சீனாவின் தென்மேற்கு குய்ஷோ மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. 'ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன்' என்ற பெயரில் இப்பாலம் திறக்கப்பட்டுள்ளது. இப்பாலம், ஆற்றின் மேற்பரப்பிலிருந்து, 2,051 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே 4,658 அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனைக் கட்டி முடிக்க மூன்றாண்டுகளுக்கு மேலானது எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, மிக உயரமான பாலம் எனப் பெயர் பெற்ற அப்பகுதியில் உள்ள பெய்பன்ஜியாங் பாலத்தின் 1,854 அடி உயரத்தை, இந்த புதிய பாலம் மிஞ்சியுள்ளது. ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன் பாலம் திறக்கப்பட்டதன் வாயிலாக, இரு பகுதிகளுக்கு இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரத்தில் இருந்து இரண்டு நிமிடங்களாகக் குறைந்துள்ளதாக அம்மாகாணத்தின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஆயிரக் கணக்கான பாலங்களைக் கொண்ட மலைப்பாங்கான மாகாணமான குய்ஷோ, இப்போது உலகின் இரண்டு உயரமான பாலங்களைக் கொண்டுள்ளது. உலகின் 100 உயரமான பாலங்களில் கிட்டத்தட்ட பாதி, சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அமைந்துள்ளது.