சிரியா, மார்ச் 31-
சிரியாவின் வட பகுதியிலுள்ள பிரபலச் சந்தை ஒன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் மாண்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர். அந்தப் பகுதி துருக்கிய ஆதரவுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. AFP செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
அலெப்போ மாநிலத்திலுள்ள அந்தச் சந்தையில் ஒரு காருக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக மனித உரிமைகளைக் கவனிக்கும் சிரியாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட அந்தக் குழு, வெடிப்பால் சந்தைப் பகுதி மிக மோசமாய்ச் சேதமுற்றதாகச் சொன்னது. அங்கு நெருப்புப் பரவியது. மருத்துவ வாகனங்களும் சம்பவ இடத்துக்கு உடனே விரைந்தன.
சிரியாவில் 2011ஆம் ஆண்டு போர் தொடங்கியது.
போரினால் 507,000க்கும் அதிகமானோர் மாண்டனர். மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.