மகாராஷ்டிர, மார்ச் 7 -
திடீரென்று வீட்டின் அறைக்குள் சிறுத்தை நுழைந்தால் என்ன செய்வோம்? அலறுவோம்… ஆர்ப்பாட்டம் செய்வோம்.இந்தியாவில் சிறுத்தையைக் கண்டவுடன் சிறுவன் ஒருவன் செய்த செயல் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில் 12 வயதுச் சிறுவன், வீட்டின் முன் அறையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது.அவன் கைத்தொலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். திடீரென்று அறைக்குள் சிறுத்தை நுழைகிறது. அது சிறுவனைக் கவனிக்கவில்லை.சிறுவனோ சிறுத்தையைப் பார்த்துவிட்டான்.
கத்தவில்லை...பீதியடையவில்லை.சிறுவன் மெதுவாக எழுந்து நிற்கிறான்.தொலைபேசியைக் கையில் எடுத்துக் கொள்கிறான். சத்தமில்லாமல் அறையை விட்டு வெளியேறி..கதவை மூடுகிறான்.சிறுவன் அறையைப் பூட்டிவிட்டுச் சென்றான்.
விவரம் தெரிவித்ததும் வனவிலங்கு மீட்புக் குழுவினர் வீட்டிற்கு வந்தனர்.சிறுத்தைக்கு மயக்க மருந்து அளித்து அதை எடுத்துச் சென்றனர்.சிறுவனின் நிதானம் இணையவாசிகளைக் கவர்ந்தது.அவர் தைரியமாகச் செயல்பட்டு ஆபத்தான சூழலைத் தவிர்த்ததாக அவர்கள் புகழ்கின்றனர்.