அமெரிக்காவில் 1977லிருந்து 1981 வரை அதிபராக பதவி வகித்தவர், ஜிம்மி கார்டர் என அழைக்கப்பட்ட ஜேம்ஸ் எர்ல் கார்டர் (99). ஜிம்மி கார்டரின் மனைவி ரோஸலின் கார்டர்.
1927ல் அமெரிக்காவில் பிறந்த ரோஸலின், 1946ல் ஜிம்மி கார்டரை மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகளும், 11 பேரக்குழந்தைகளும், 14 கொள்ளுப்பேர குழந்தைகளும் உள்ளனர்.
அமெரிக்க அதிபர்களிலேயே நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து வந்த தம்பதியினரான இருவரும் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் கார்டர் சென்டர் எனும் பெயரில் லாபநோக்கற்ற அறக்கட்டளையை நடத்தி வந்தனர்.
ரோஸலின், தன் கணவரின் பதவிக்காலம் நிறைவடந்ததும் எழுத்தாளராகவும் சமூக மற்றும் பொதுநல தொண்டுகளில் ஆர்வமுடையவராகவும் தன்னை முன்னிறுத்தி வந்தார்.
பெண்கள் உரிமை, மனநலம் உள்ளிட்ட விஷயங்களில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக, குடும்பத்தார் அருகில் இருக்க, ரோஸலின் கார்டர் காலமானதாக அவர்களின் அறக்கட்டளை செய்தி வெளியிட்டுள்ளது.








