புபானேஷ்வர், ஜூலை.15-
இந்தியா, ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவி ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
22 வயதுடைய அந்த மாணவி, கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மூன்று நாட்கள் உயிருக்கு போராடி வந்த நிலையில் இறுதியில் பரிதாபமாக மாண்டார்.
பேராசிரியர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தாகவும், மிரட்டியதாகவும் இதன் விளைவாக அந்த மாணவி இத்தகைய விபரீத முடிவை எடுத்தார் என்று நம்பப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அந்தப் பேராசிரியரும் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12 ஆம் தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது அந்த மாணவி, கல்லூரியின் முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.








