Oct 30, 2025
Thisaigal NewsYouTube
லண்டனுக்குக் குடியேறும் திட்டம், தம்பதியரின் வாழ்வில் கானல் நீரானது
உலகச் செய்திகள்

லண்டனுக்குக் குடியேறும் திட்டம், தம்பதியரின் வாழ்வில் கானல் நீரானது

Share:

புதுடெல்லி, ஜூன்.13-

லண்டனில் நிரந்தரமாகக் குடியேறுவதற்காக ஒரு மென்பொருள் பொறியியலாளர், ஒரு மருத்துவரான அவரின் மனைவி மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகளின் கனவு, ஏர் இந்தியா விமான விபத்தில் கானல் நீரானது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும், கோர விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகமானது.

லண்டனில் குடியேறப் போகும் மகிழ்ச்சியில், ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய அடுத்த சில வினாடிகளிலேயே இரு வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்திருந்த அந்த குடும்பத்தினர், ஆகக் கடைசியாக எடுத்துக் கொண்ட செல்பி படத்தைத் தங்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைத்து விட்டுதான் புறப்பட்டனர்.

அந்த செல்பி படம், அவர்களின் கிராம மக்களை மட்டுமல்ல. உலகத்தில் உள்ளவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மென்பொருள் பொறியிலாளரான பிரதிக் ஜோஷி, லண்டனில் கடந்த ஆறு ஆண்டு காலமாகப் பணியாற்றி வருகிறார்.

குடும்பத்தினரை நிரந்தரமாக லண்டனில் குடியேற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதிக் ஜோஷி, லண்டனிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பியிருக்கிறார். ராஜஸ்தான், பன்ஸ்வாரா நகரில் உள்ள, தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு புறப்பட ஏர் இந்தியா விமானத்தில் அமர்ந்த போதுதான் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

ஒரு நிபுணத்துவ மருத்துவரான பிரதிக் ஜோஷியின் மனைவி டாக்டர் கோமி வியாஸ், பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ராஜஸ்தானில் தாம் பணியாற்றி வந்த மருத்துவர் தொழிலை ராஜினாமா செய்தார்.

அத்தம்பதியரின் 5 வயது, இரட்டையர் ஆண் பிள்ளைகளான நகுல் மற்றும் பிரட்யுட், 8 வயது மகள் மிராயா ஆகிய ஐவரும் இந்தியாவை விட்டுப் புறப்படுகிறோம் என்ற தங்களின் மகிழ்ச்சியை உறவினர்களுடன் ஆகக் கடைசியாகப் பகிர்ந்து கொள்வதற்கு செல்பி படம் எடுத்தனர். அதுதான் அவர்கள் எடுத்துக் கொண்ட கடைசிப் படம். அதன் பின்னரே இவ்விபத்து நிகழ்ந்து, ஐவரின் உயிரையும் பறித்தது.

இந்தத் துயரச் செய்தி ராஜஸ்தான், பன்ஸ்வாரா நகரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரதிக் ஜோஷி மற்றும் அவரின் மனைவி டாக்டர் கோமி வியாஸ் கடின உழைப்பாளிகள் என்றும், அவர்கள் தொலைநோக்கு சிந்தனைக் கொண்டவர்கள் என்றும் உள்ளுர் மக்கள் புகழ்ந்தனர்.

தங்கள் மூன்று குழந்தைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே லண்டனில் நிரந்தரமாகக் குடியேறச் சென்றனர். ஆனால், அதுவே அவர்களின் வாழ்க்கைக்கும் இறுதிப் பயணமாக அமையும் என்று தாங்கள் நினைக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கண்ணீருடன் கூறினர்.

Related News