புதுடெல்லி, ஆகஸ்ட்.01-
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் ஆபரேஷன் மஹாதேவ் மூலம், கடந்த 100 நாட்களில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.,22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் மூலம், பாகிஸ்தானில் உள்ள 100 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
அதன் பிறகு, ஜம்மு காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை, 'ஆபரேஷன் மஹாதேவ்' என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வந்தனர். அண்மையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் மஹாதேவ் மூலம், கடந்த 100 நாட்களில் இந்திய ராணுவத்தால் தேடப்பட்டு வந்த 12 முக்கிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள். இவர்கள் ஜம்மு காஷ்மீரில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது.








