இஸ்லாமாபாத், ஆகஸ்ட்.16-
பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையில், 154 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பருவ மழை தீவிரமடைந்து கடந்த ஒரு மாதமாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்ததில், குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள கிசர் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் எட்டு பேர் இறந்தனர். வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததுடன், பள்ளிகள், மருத்துவமனைகள் சேதமடைந்தன. தண்ணீரில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
ஜீலம் பள்ளத்தாக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 600க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக இதுவரை மொத்தம் 154 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.