உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய ரஷ்யா 8 மாதங்களாக அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யா படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்களில் பலர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் தெற்கு உக்ரைனை சேர்ந்த ஜபோரி ஜியா நகரில் ரஷ்ய படைகள் திடீரென 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதிகாலையில் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள் நகர மையப் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது.இந்த ஏவுகனை தாக்குதலில் 1 குழந்தை உள்பட 17 பேர் பலியானதாக உக்ரைன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முக்கிய சாலையில் உள்ள 5 மாடி குடியிருப்பு ஒன்று தரை மட்டம் ஆனதாகவும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே கார்கீவ் பிராந்தியத்தில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய குப்யான்ஸ்க் நகரை மீட்க உக்ரைன் ராணுவம் முயன்றபோது, ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 220 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்யா ராணுவம் தரப்பில் கூறுகையில் ‘குப்யான்ஸ்க் நகரை கைப்பற்ற வந்த உக்ரைன் ராணுவத்தின் அனைத்து தாக்குதல்களும் ரஷ்ய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டு உள்ளன. இதில் உக்ரைனின் 220 வீரர்கள் கொல்லப்பட்டனர்’ என கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதே சமயம் 220 வீரர்கள் பலியானதை உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே 2019ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது.