ரியோ டி ஜெனெரோ, ஆகஸ்ட்.13-
தெற்கு பிரேசிலில் வெடி பொருட்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். குரிடிபாவில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, பரானா தீயணைப்புத் துறையினர் அவ்வெடிப்பு தொடர்பான படங்களை வெளியிட்டனர். அப்பகுதியில் பல பொருட்கள் சேதமடைந்து காணப்பட்டன.
சம்பவத்திற்குப் பிறகு குறைந்தது ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த ஒன்பது பேரில் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை என்று பரானாவின் பொதுப் பாதுகாப்புச் செயலாளர் ஒப்புக்கொண்டார்.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக பாதுகாப்புப் படையினரும் மோப்ப நாய்களும் அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்த மேலும் ஏழு பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.