Oct 20, 2025
Thisaigal NewsYouTube
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்
உலகச் செய்திகள்

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்

Share:

மாலத்தீவு , ஏப்ரல் 22-

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 368 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 2,85,000 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அந்நாட்டு மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) மற்றும் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) ஆகியவற்றுக்கு இடையேயான கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த தேர்தல் மாலத்திவு அதிபர் முகமது முய்சுவுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. சீன ஆதரவாளரான அவர், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சீன ஆதரவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் பினாமியாக களமிறங்கி முகமது முய்சு வெற்றி பெற்றார்.

மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்ஸு தேர்வானதில் இருந்தே அந்நாட்டுடனான இந்தியாவின் உறவு சுமூகமாக இல்லை. மாலத்தீவின் புதிய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவாக உள்ளதாகவும், இது தமது தேசிய பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளதாகவும் இந்தியா வருத்தம் தெரிவித்தது. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்களின் தரக்குறைவான விமர்சனங்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

இந்திய இராணுவத் துருப்புக்களை வெளியேற்றுவது, சீன அரசுக்கு உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களை வழங்குவது, குறிப்பாக சீன உளவுக் கப்பலை அதன் தலைநகர் மாலேயில் சர்ச்சைக்குரிய வகையில் நிறுத்திவைத்தது போன்றவை இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவுகளை மேலும் மோசமடைய செய்தன.

மாலத்தீவு அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்தியாவுகு ஏதிரான நிலைப்பாடு, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் வழக்கில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சீன ஆதரவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் விடுதலை செய்யப்பட்டது என பல்வேறு சர்ச்சைகளில் அதிபர் முகமது முஸ்சு சிக்கியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஆளாகியுள்ள நிலையில், நடைபெறும் மாலத்தீவு தேர்தல், அதிபர் முகமது முய்சுவின் செல்வாக்கை சோதிக்கும் களமாக இருக்கும் என்கிறார்கள்.

Related News