பெய்ஜிங்: பாகிஸ்தான் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியது சீனாவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது இந்தியாவிற்கு சாதகமாக முடியும் வாய்ப்புகள் உள்ளன.
பாகிஸ்தான் மீது வைக்கப்படும் அழுத்தங்கள் எல்லாம் சீனாவிற்கு ஒருவகையில் அழுத்தமாகவும், இந்தியாவிற்கு ஆதரவாகவும் மாறும். அந்த வகையில்.. பாகிஸ்தான் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியது சீனாவை நிலைகுலைய வைத்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பயங்கரவாதத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு சீனா புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியுள்ளது.
அதற்கு முன்பாக இந்த சண்டையை முதலில் நிறுத்துங்கள். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா மறைமுகமாக பலனடையுமோ என்று எண்ணப்படும் நிலையில்தான் சீனா இந்த கருத்தை வெளியிட்டு உள்ளது.
ஈரான் தாக்குதல்: பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரானின் உயரடுக்கு ராணுவ குழு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகளை ஏவுகணைகளால் தாக்கிய ஈரான் தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் தீவிரவாத அமைப்பின் முகாம்களில் ஈரான் சரமாரியாக ஏவுகணை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.