டக்கா, செப்டம்பர்.18-
நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தின் போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்காளதேசத்தில் ஆட்சியில் உள்ளது. வங்காளதேசத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பதவி இழந்து நாட்டைவிட்டு வெளியேறி ஷேக் ஹசீனா மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தடை விதித்தும், தேசிய அடையாள அட்டையை முடக்கி வைத்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஷேக் ஹசீனா ஆட்சியின் போது பணியாற்றிய ராணுவ உயரதிகாரி, அவரது குடும்பத்தினர் தேர்தலில் வாக்களிக்கத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.