ஜகார்த்தா, அக்டோபர்.16-
இந்தோனேசியாவில் லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்துச் சிதறியதில், 10 கிலோமீட்டர் உயரத்திற்குப் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில், பாலி தீவுக்கு அருகே கிழக்கு நூசா தெங்காராவில் 5, 200 அடி உயரம் கொண்ட லெவோடோபி லகி லகி எரிமலை அமைந்துள்ளது.
இந்த எரிமலை அண்மைய காலமாக அடிக்கடி வெடித்து தீ பிழம்புகளைக் கக்கி வருகிறது.
கடைசியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இது வெடித்தது. இதனால் அந்த எரிமலைக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லெவோடோபி லகி லகி எரிமலை மீண்டும் திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த வெடிப்பு, ஒன்பது நிமிடங்கள் நீடித்த நிலையில், 10 கிலோமீட்டர் உயரம் வரை எரிமலை சாம்பலுடன் கரும்பு புகை எழுந்தது.
எரிமலை வெடித்த பின் மழை பெய்தால், சாம்பல் மற்றும் சேறு கலந்து பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, அருகிலுள்ள கிராமங்களில் வசிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிமலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையம் சுற்றளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எரிமலையிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.