டக்கா, நவம்பர்.19-
ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து கொண்டு வர இண்டர்போல் உதவியை வங்காளதேசம் நாடி உள்ளது.
வங்காளதேசத்தில் மாணவர் போராட்டத்தால் ஆட்சி, அதிகாரத்தை இழந்த முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார். இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அவர், டில்லியில் அதி உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ளார்.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த வங்காளதேச நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதே வழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்சாமன் கான் கமலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இந்தியாவில் அடைக்கலமாகி உள்ள ஹசீனாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு இண்டர்போல் உதவியை நாடவும் தீர்மானித்து பூர்வாங்க பணிகளை அந்நாடு தொடங்கி உள்ளது.
கைது வாரண்ட்டுடன் இண்டர்போலுக்கு ஏற்கனவே ஒரு விண்ணப்பம் வங்காளதேசம் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.








