பீஜிங்: இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்த மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. இந்த சலசலப்புக்கு மத்தியில் மாலத்தீவு அதிபர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவு சென்றார். லட்சத்தீவில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார். பிரதமர் மோடியின் இந்த பதிவை மாலத்தீவை சேர்ந்த சில அரசியல்வாதிகள், மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து இருந்தனர். குறிப்பாக மாலத்தீவு அமைச்சர்களான மல்ஷா ஷரீப், மரியம் சியூனா மற்றும் அப்துல்லா மசூம் மஜித் ஆகியோரும் விமர்சித்து இருந்தனர்.
பிரதமர் மோடியை இழிவாக விமர்சித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத், இப்ராகிம் முகமது சோலிக் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய கருத்துக்களால் இந்தியா-மாலத்தீவு இடையே நல்லுறவு பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.
மாலத்தீவு சர்ச்சை: ஏற்கனவே, சீனாவுக்கு ஆதரவானவராக மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு அறியப்படும் நிலையில், தற்போது அவரது அமைச்சர்கள் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து விளக்கம் அளித்த மாலத்தீவு அரசு, "பிரதமர் மோடி குறித்து வெளியான தரக்குறைவான கருத்துகள் அரசின் கருத்து அல்ல. அது தனிப்பட்டவர்களின் கருத்து. இதில் சம்பந்தப்பட்ட 3 அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறியது.
மாலத்தீவு அமைச்சர்களின் கருத்து சர்ச்சையான நிலையில், இந்தியர்கள் பலரும் மாலத்தீவு பயணத்தை கேன்சல் செய்தனர். சமூக வலைத்தளங்களில் மாலத்தீவுக்கு எதிரான பதிவுகள் டிரெண்ட் ஆனது. சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருவாயை பெருமளவு நம்பியிருக்கும் மாலத்தீவுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனாவின் உதவியை மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு நாடியுள்ளார்.
வளர்ச்சியின் பங்காளியாக சீனா: சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாக நேற்று மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு சென்றார். தனது பயணத்தின் 2-வது நாளான இன்று மாலத்தீவு தொழில் மன்றத்தில் உரையாற்றினார். அப்போது மாலத்தீவு அதிபர் கூறியதாவது:- மாலத்தீவின் நெருங்கிய கூட்டாளியாக சீனா உள்ளது. எங்கள் வளர்ச்சியின் முக்கிய பங்காளியாகவும் சீனா உள்ளது.