டக்கா, நவம்பர்.21-
வங்காளதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். கோல்கட்டா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்நிலநடுக்கம் இன்று காலை 10.08 மணிக்கு ஏற்பட்டது. அது புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. அதனால் டக்காவில் நடந்த, வங்காளதேசம், அயர்லாந்து இடையிலான கிரிக்கெட் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
கட்டடங்கள் கடுமையாகக் குலுங்கின. வீட்டின் சுவரின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பாதசாரிகள் தண்டவாளங்கள் விழுந்து நசுங்கி உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.
குடியிருப்பாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் உயரமான கட்டடங்களில் இருந்து வெளியேறி, திறந்தவெளிகளில் கூடினர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட கிழக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிரொலித்தது.








