மாலே: இந்தியாவுடன், மாலத்தீவு மோதலை கடைப்பிடித்து வருகிறது. இந்த விவகாரம் மாலத்தீவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் அந்நாட்டின் அரசு வழக்கறிஞரான ஹுசைன் ஷமீம் சுத்தியலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டின் அண்டை நாடாக தீவுத்தேசமான மாலத்தீவு உள்ளது. இந்த நாடு அளவில் மிகவும் சிறியது. மாலத்தீவு அதிபராக எம்டிபி கட்சியின் இப்ராஹிம் முகமது சோலி இருந்தார். இவர் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இப்ராஹிம் முகமது சோலி தோல்வியடைந்தார்.
இந்த தேர்தலில் பிஎன்பி கட்சியை சேர்ந்த முகமது முய்ஸு வெற்றி பெற்று அதிபர். இவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். மாறாக சீனாவுடன் நெருக்கம் காட்டி வருபவர். இதனால் முகமது முய்ஸு வெற்றியை தொடர்ந்து இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது.
மேலும் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் மற்றும் அவர் வெளியிட்ட போட்டோ மற்றும் வீடியோ என்பது மாலத்தீவை கோபப்படுத்தியது. மாலத்தீவின் சுற்றுலா துறையை முடக்கும் வகையில் உள்நோக்கத்துடன் லட்சத்தீவை பிரதமர் மோடி புரோமோட் செய்வதாக அந்நாட்டு அமைச்சர்கள், எம்பிக்கள் கூறியதோடு இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்தனர். இது இந்தியா-மாலத்தீவு இடையேயான பிரச்சனையை இன்னும் அதிகப்படுத்தியது.
மாலத்தீவு செல்வதற்கான டிக்கெட்டுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். இதனால் பயந்துபோன மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு 3 அமைச்சர்களை சஸ்பெண்டும் செய்தார். இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை அதிபர் முகமது முய்ஸு தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் முகமது முய்ஸு ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.