ஃபுளோரிடா, ஜூலை.25-
உலகப் புகழ் பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் அமெரிக்கா, ஃபுளோரிடாவில் காலமானார். 71 வயதான ஹல்க் ஹோகன் மாரடைப்பினால் மரணமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 90 ஆம் ஆண்டுகளில் மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவையும் பாராட்டையும் பெற்று நீங்கா இடம் பெற்றவர் மறைந்த ஹல்க் ஹோகன்.
WWE மல்யுத்தப் போட்டியைப் பிரபலமாக்கிய பெருமை இவருக்கு முக்கிய இடம் உண்டு. ஹல்க் ஹோகனின் வீரதீர ஆளுமை, தேசபக்தி விளம்பரங்கள் மற்றும் உடல்கட்டு ஆகியவற்றால் அவரது புகழ் உயர்ந்தது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கையைச் சுழற்றியபடி காதருகே கொண்டுச் செல்லும் மேனரிஸம், பனியனைக் கிழித்து விட்டு கத்துவது, ஹோர்ஸ் ஷூ மீசை என மாமிச மலை ஹல்க் ஹோகனை அறியாத WWE ரசிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
WWE நிறுவனம் இன்று மாபெரும் சாம்ராஜ்யமாக பரந்து விரிந்திருக்க ஹல்க் ஹோகனும் முக்கியக் காரணமாகும்.
1953 ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமெரிக்காவின் ஜார்ஜியாவில் ஹல்க் ஹோகன். 1977 ஆம் ஆண்டு அவரது மல்யுத்த வாழ்க்கை தொடங்கினாலும், 1983 இல் WWE எனப்படும் உலக மல்யுத்தக் கூட்டமைப்பில் இணைந்தார்.
அமெரிக்காவில் மட்டும் பிரபலமாக இருந்த WWE மல்யுத்தத்தை உலகம் முழுவதும் கொண்டுச் சேர்த்ததில் ஹல்க் ஹோகனுக்கு மிகப் பெரிய பங்குண்டு. மல்யுத்த கோதா வளையத்தில் ஹல்க்கின் நாடகத்தன்மை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் ஈர்க்கும் காந்தமாக இருந்தது.
ஹல்க்கின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடங்கி ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








