டக்கா, ஜூலை.21-
வங்கதேச விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் பள்ளியில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டக்காவில் அந்நாட்டு விமானப் படையின் F-7 BGI விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பள்ளி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. சம்பவத்தில் காயமுற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பள்ளி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதை, வங்கதேச ராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியது. மாணவர்கள் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது.
விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. இந்த விபத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.








