டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 2009 முதல் தோல்வியே கண்டிராத ஷேக் ஹசீனா 5வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். யார் இவர் என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், வங்கதேசத்தின் பிரதமராக 5-வது முறையாக பொறுப்பேற்க இருக்கிறார் ஷேக் ஹசீனா.
வங்கதேசத்தில் தேர்தலை நடுநிலையான அரசு அமைத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்த ஷேக் ஹசீனா, எதிர்க்கட்சிகளை பயங்கரவாதிகள் எனவும் முத்திரை குத்தினார். தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் தேர்தலை பங்காளதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.
எதிர்கட்சிகள் பெரும்பாலானவை தேர்தலை புறக்கணித்ததால் ஷேக் ஹசீனா எளிதில் வென்றார். வங்கதேசத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து வெற்றி பெறுகிறார். ஷேக் ஹசீனா. ஷேக் ஹசீனா அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்தான். வங்கதேசத்தின் நிறுவன தந்தையும் முதல் ஜனாதிபதியுமான பங்கபந்து ஷேக் முகம்மது முஜிபுர் ரகுமாமானின் மகள் ஆவார்.