இந்தியா, ஏப்ரல் 20-
இந்தியாவை தலைமையிடமாக கொண்ட உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் எவரெஸ்ட் (Everest). எவரெஸ்ட் நிறுவனம் மசாலா உள்ளிட்ட பல உணவுப் பொருள்களை தயாரித்து வரும் சூழலில், இந்நிறுவனம் பல்வேறு நாட்டிற்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதியும் செய்து வருகிறது. 1967ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்நிறுவனம் சிங்கப்பூர் நாட்டிற்கு ஏற்றுமதி செய்த மீன் கறி மசாலாவில் நச்சு பொருள் கலந்திருப்பதாக கூறி அந்நாட்டு உணவுப்பொருள் பாதுகாப்பு அமைப்பான சிங்கப்பூர் உணவு முகமை (SFA) அதனை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எவரெஸ்ட் மின் கறி மசாலாவில் எத்திலீன் ஆக்ஸைட் (ethylene oxide) அதிகளிவில் இருப்பதாகவும், இது மனிதர்கள் உண்பதற்கு தகுந்தது இல்லை என தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை கடந்த ஏப். 18ஆம் தேதி சிங்கப்பூர் உணவு முகமை வெளியிட்டுள்ளது.
எத்திலீன் ஆக்ஸைட் என்பது பூச்சி கொல்லி என்றும், அது மசாலா பொருள்களை பாதுகாப்பதில் குறைந்தளவில் பயன்படுத்தலாம் என்றாலும் உணவப்பொருள்களில் பயன்படுத்த அனுமதி இல்லை என சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் உணவு முகமை வெளியிட்ட அறிக்கையில்,"அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எத்திலீன் ஆக்சைடு இருப்பதால் எவரெஸ்ட் மீன் கறி மசாலாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பது குறித்து ஹாங்காங்கில் உள்ள உணவு பாதுகாப்பு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏற்றுமதியாளரான எஸ்பி முத்தையா மற்றும் சன்ஸ் பிரைவெட் நிறுவனத்திடம் எவரெஸ்ட் மீன் கறி மசாலாவை திரும்பப் பெற கோரி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது.
எத்திலீன் ஆக்சைடு என்பது விவாசயப் பொருள்களில் இருந்து நுண்ணுயிர்களை அழிப்பதற்காக பூச்சிக்கொல்லியாக பொதுவாக பயன்படுத்துகிறது. ஆனால், உணவுப் பொருள்களில் நேரடியாக அதன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூர் உணவு அமைப்பு அதன் அறிக்கையிவ் இவ்வாறு தெரிவித்திருந்தது. "எத்திலீன் ஆக்சைடை மசாலா பொருட்களில் கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தலாம் என சிங்கப்பூர் உணவு விதிமுறைகளின்கீழ் அனுமதிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.
குறைந்த அளவு எத்திலீன் ஆக்சைடு உள்ள உணவை உட்கொள்வதால் உடனடி ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற ரசாயனங்களை நீண்டகாலமாக உண்பது என்பது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதில், "உணவில் இந்த ரசாயனங்களை உட்கொள்வதில் உடனடி ஆபத்து இல்லை. இருப்பினும் இதை முடிந்தவரை குறைக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளது.
இதுகுறித்து எவரெஸ்ட் நிறுவனம் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பதிலில்,"எங்கள் நிறுவனம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான மற்றும் புகழ்பெற்றதாகும். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் வெளியே அனுப்பப்படுவதற்கு முன்பு தொழிற்சாலையில் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்திய மசாலா வாரியம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பிற சட்டப்பூர்வ அமைப்புகளால் வகுக்கப்பட்ட மிக உயர்ந்த சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு தரங்கள் மற்றும் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுகிறோம்.
தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் முன், ஒவ்வொரு தயாரிப்புகளும் இந்தியாவின் மசாலா வாரியத்தின் தர ஆய்வுக்கு உட்படுத்தப்படும். எவ்வாறாயினும், பிரச்னை குறித்து முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம், எங்கள் தரக் கட்டுப்பாட்டுக் குழு இந்த விஷயத்தைப் மேற்பார்வையிடும்" என்றது.