டெல் அவிவ்: இந்தியாவை நோக்கி வந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்ட நிலையில், அந்தக் கப்பல் எப்படிக் கடத்தப்பட்டது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே அடுத்தடுத்து பதற்றமான சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான சண்டை ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே மறுபுறம் லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் போராளிக் குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான தங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கப்பல் கடத்தல்: நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏமனில் உள்ள ஹவுதி குழு இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த சர்வதேச சரக்குக் கப்பலைப் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. தெற்கு செங்கடல் பகுதியில் அந்த போர்க்கப்பல் சென்று கொண்டிருந்த போது ஹவுதி குழு இதைக் கடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை இஸ்ரேல் ஈரானின் பயங்கரவாத செயல் என்றும் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தும் சம்பவம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே அது என்ன சரக்கு கப்பல்.. அது எப்படிக் கடத்தப்பட்டது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான இந்த ராணுவ கப்பலை ஜப்பான் இயக்கி வந்தது. இந்த சரக்குக் கப்பலைத் தான் ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி படை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதேநேரம் கப்பலில் இஸ்ரேலியர்கள் யாரும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.