கோலாலம்பூர், டிசம்பர்.31-
239 பயணிகளுடன், மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370, மர்மமான முறையில் மாயமாகி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்த விட்ட நிலையில், உலக விமானப் போக்குவரத்து வரலாற்றின் மிகப் பெரிய புதிர்களில் ஒன்றான இதற்கு பதில்களைத் தேடும் முயற்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று டிசம்பர் 30-ஆம் தேதி, தென்னிந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில், இந்த விமானத்தைத் தேடும் பணியானது மீண்டும் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவீன ஆழ்கடல் ரோபோட்டுகள் மற்றும் மேம்பட்ட தரவுத் தொழில்நுட்பங்களின் உதவியுடன், அமெரிக்க விசாரணை அதிகாரிகள், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அரசாங்கங்கள் மற்றும் நிபுணர்களின் கண்களில் இருந்து தப்பிய தடயங்களைத் தேடி, கடலுக்கடியில் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையை, தற்போது Ocean Infinity என்ற நிறுவனம், மலேசிய அரசாங்கத்தின் அனுமதியுடன் மீண்டும் கையில் எடுத்துள்ளது.
“கண்டுபிடிக்கவில்லை என்றால், கட்டணம் இல்லை” என்ற இரு தரப்பு ஒப்பந்தத்துடன், இந்த தேடுதல் நடவடிக்கையானது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
ஒருவேளை இந்த தேடுதல் பணியின் போது, எம்எச்370-இன் தடயங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், Ocean Infinity நிறுவனத்திற்கு 70 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சின் அறிக்கை கூறுகின்றது.
இந்தப் புதிய தேடல் நடவடிக்கையானது, 55 நாட்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 5,800 சதுர மைல்கள் கொண்ட நெருக்கமான தேடல் பகுதிகளை Ocean Infinity நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
இது முந்தைய முயற்சிகளை விட மிகச் சிறியது என்றாலும், புதுப்பிக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் நிபுணத்துவ பகுப்பாய்வுகளின் மூலம் Ocean Infinity நிறுவனமானது நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.








