தென் கொரியா, மார்ச் 1 -
தென் கொரியாவில் ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் இன்னமும் வேலைக்குத் திரும்பவில்லை.போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் நேற்றைக்குள் (29 பிப்ரவரி) வேலைக்குத் திரும்பவில்லை என்றால் அவர்களின் மருத்துவ உரிமம் தற்காலிகமாய் ரத்துச் செய்யப்படும் என்று அரசாங்கம் கூறியிருந்தது.
எனினும் அரசாங்கத்துடனான போராட்டத்தில் இன்னமும் தீர்வு கிடைக்காததால் பலர் வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.பதவி விலகல் கடிதம் கொடுத்த சுமார் 10,000 பயிற்சி மருத்துவர்களில் ஏறக்குறைய 300 பேர் மட்டுமே வேலைக்குத் திரும்பியிருப்பதாய் அதிகாரிகள் கூறினர்.
இதுவரை பயிற்சி மருத்துவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே அதிகாரபூர்வக் கலந்துரையாடல் இடம்பெறவில்லை.அரசாங்கம் சுமார் 90 மருத்துவர்களைச் சந்திக்க வருமாறு நேற்று அழைத்ததாக யொன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஆனால் 5 அல்லது 6 பேர் மட்டுமே சென்றதாகவும் கூறப்பட்டது.சோலில் இந்த வார இறுதியில் மருத்துவர்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.