ஓட்டவா: இந்தியா கனடா இடையிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. காலிஸ்தான் தலைவரை இந்திய அரசு கொன்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை இந்திய அரசு கொன்றது என்று ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்து உள்ளதால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். காலிஸ்தான் விடுதலைக்காக போராடிய இவர் இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான கேதிஃப் எனப்படும் காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் நிஜ்ஜார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்தியாவில் இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக, நிஜ்ஜாரின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து இந்தியா தனது கவலைகளை பலமுறை கனடாவிடம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டில், முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ஜஸ்டின் ட்ரூடோவிடம் தேடப்படும் நபர்களின் பட்டியல் அளித்தார். அதில் நிஜ்ஜாரின் பெயரும் இருந்தது.