சிங்கப்பூர், நவம்பர்.21-
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு மலேசியரான சாமிநாதன் செல்வராஜ், வரும் நவம்பர் 27 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார் என்பதை சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை சிங்கப்பூர் சிறைத்துறை நிர்வாகம், சாமிநாதனின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தின் படி, சாமிநாதனின் குடும்பத்தினர், வரும் நவம்பர் 26-ஆம் தேதி வரையில், காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் சாமிநாதனைச் சந்திக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, போதைப் பொருள் துஷ்பிரயோகச் சட்டமான MDA-வில் உள்ள சில பிரிவுகள், சிங்கப்பூர் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
இச்சட்டத்தில் உள்ள விதிகளானது, போதைப் பொருள் கடத்தலில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர், தான் கடத்தியது போதைப் பொருள் தான் என்பதை அறிந்திருந்தார் என்ற யூகத்தின் அடிப்படையில் நிரூபிக்கிறது.
ஆனால் அதனை மறுத்து தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் பொறுப்பை குற்றம் சாட்டப்பட்டவரின் மீது திணிப்பது நியாயமற்றது என்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
என்றாலும், சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி Sundaresh Menon அதனை நிராகரித்தார்.
இச்சட்டத்தினால், பாதிக்கப்பட்ட மரணத் தண்டனைக் கைதிகளில் இரு மலேசியர்களான தட்சணாமூர்த்தியும், சாமிநாதனும் அடங்குவர்.
தட்சணாமூர்த்திக்கு கடந்த செப்டம்பர் மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சாமிநாதனுக்கு தூக்கு தண்டனையை எதிர்நோக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








