மாலத்தீவிற்கு இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்நாடு எழுப்பியுள்ள 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி கோரிக்கைக்கு கொள்கை அளவில் ஆதரவு வழங்க மலேசியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹமட் முய்ஸ்ஸூவை தனிப்பட்ட முறையிலும், இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் சந்தித்த பின்னர் அன்வார் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் நிதிய அதிகார அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படவுள்ள இந்த ஏற்பாட்டை, ஒரு வகையான 'மென் கடன்' என்று அன்வார் விவரித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளின் மத்திய வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் மென் கடன் திட்டமாக இத்திட்டம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதி வசதிக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து பேங்க் நெகாரா மலேசியா மற்றும் மாலத்தீவு நாணய ஆணையம் ஆகியவை தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மாலத்தீவின் கடன் திருப்பிச் செலுத்தும் வரலாறு, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் அரசாங்க உத்தரவாதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தக் கோரிக்கைக்கு கொள்கை அளவில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மாலத்தீவு அதிபர் இந்த விவகாரத்தை தன்னிடம் முன்வைத்ததாகவும், 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி வசதி தொடர்பாக பேங்க் நெகாரா விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியிருந்ததாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் நட்பின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்வார் உறுதியளித்துள்ளார்.








