Nov 16, 2025
Thisaigal NewsYouTube
டில்லி கார் குண்டு வெடிப்பு: மேலும் ஒரு பெண் மருத்துவர் கைது
உலகச் செய்திகள்

டில்லி கார் குண்டு வெடிப்பு: மேலும் ஒரு பெண் மருத்துவர் கைது

Share:

புதுடில்லி, நவம்பர்.16-

டில்லி கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே போல, காஷ்மீரைச் சேர்ந்த 200 மருத்துவ மாணவர்கள் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

டில்லியில் கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த அதீல் மற்றும் முசம்மில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய மற்றொரு மருத்துவரான உமரும் காஷ்மீரில் பணியாற்றி வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பல மருத்துவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனிடையே, டில்லி கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய பெண் மருத்துவர் ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தெற்கு காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் பிரியங்கா ஷர்மாவை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே, கைது செய்யப்பட்ட அதீல் அளித்த தகவலின் பேரில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பிரியங்கா ஷர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த இவர், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார். அவரது செல்போன் மற்றும் சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related News