இஸ்லாமாபாத், டிசம்பர்.20-
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கு தலா 17 ஆண்டுச் சிறைத் தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தவிர மேலும் பல வழக்குகள் இம்ரான் மீது தொடுக்கப்பட்டன. அதில் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைச் கசிய விட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், சவுதி மன்னரிடம் பரிசுப் பொருளாக நகை பெற்றது தொடர்பான 2வது ஊழல் வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஷாருக் அர்ஜுமந்த் தீர்ப்பு வழங்கினார்.
சிறையில் உள்ள அவர், கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் பேச்சுகள் எழுந்தன. இதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கட்சியினர் பெரும் கொந்தளிப்பில் இருந்ததோடு, போராட்டங்களிலும் குதித்தனர். சிறையில் இம்ரான் சகோதரி உஸ்மா கான் சந்தித்து பேசிய பிறகு தான், அவர் உயிருடன் இருக்கிறார் என்று அனைவரும் நம்பினர்.
''இம்ரான் கான் நலமுடன் உள்ளார், ஆனால் அவரை மன ரீதியாக சித்ரவதைக்கு ஆளாக்குகின்றனர்'' என்று சிறையில் சென்று அவரை பார்த்து வந்த சகோதரி தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








