மாஸ்கோ: உக்ரைன் போரில் சுமார் 3.8 கிமீ தொலைவில் இருந்த ரஷ்ய வீரரை, உக்ரைன் ஸ்னைப்பர் ஒருவர் வெற்றிகரமாகத் தட்டித்தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா கடந்தாண்டு உக்ரைன் மீது முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் இப்போது தொடர்ந்து வருகிறது. முதலில் இந்த போரில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்தினாலும் அதன் பிறகு உக்ரைன் பதிலடியை ஆரம்பித்தது.
இந்தப் போரில் இரு தரப்பிற்கும் இடையே பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், இது சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தட்டி தூக்கிய ஸ்னைப்பர்: இதற்கிடையே போரில் அரங்கேறிய மிரள வைக்கும் சம்பவம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 3.8 கிமீ தொலைவில் இருந்து ஒரு ரஷ்ய வீரரை உக்ரைன் ஸ்னைப்பர் சுட்டுக் கொன்றுள்ளார். இத்தனை தொலைவில் இருந்தவரை வெற்றிகரமாகச் சுட்டுத் தள்ளிய அந்த உக்ரைன் ஸ்னைப்பர் 52 வயதான முன்னாள் தொழிலதிபர் வியாசெஸ்லாவ் கோவல்ஸ்கி என்பவர் என்றும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 3.8 கிமீ தொலைவில் இருந்த நபரை அவர் சுட்டு தள்ளியுள்ளார். அதாவது உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், கத்திப்பாராவில் இருந்த நபரை அசோக் பில்லர் அருகே இருந்து சுட்டு வீழ்த்தி இருக்கிறார். அந்த புல்லட் சென்று சேரவே சுமார் 9 நொடிகள் ஆகியுள்ளது. இந்த புல்லட் பட்ட அடுத்த நொடி அந்த ரஷ்ய வீரர், உடல் சிதறி உயிரிழந்தார்.