இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், தொடர்ச்சியாக நீடித்து இருக்கும் பொருளாதார நெருக்கடி என பாகிஸ்தான் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, அதன் பிரதமர் இம்ரான் கான் மீது எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி என அரசியல் பேரிடரிலும் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. இதிலிருந்து நாடு மீள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவதுதான் ஒரே வழி என தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னர் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால், தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது. இருப்பினும் நாடு முழுவதும் இன்டெர்நெட் சேவை முடக்கப்பட்டு தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது. அந்நாட்டின் சட்ட விதிகளின்படி, தேர்தல் முடிந்து அடுத்த 14 நாட்களுக்குள் அதன் முடிவுகளை அறிவித்துவிட வேண்டும்.
இதனையடுத்து வாக்குப்பதிவு முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 854 தொகுதிகளில் நாடாளுமன்ற மற்றும் மாகாண தேர்தல் நடந்தது. இதில் அதிகபட்சமாக 348 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்தவராவார்கள். கட்சியின் கிரிக்கெட் பேட் சின்னம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சுயேச்சையாக களமிறங்கியிருந்தனர்.
கட்சிகளைப் பொறுத்த வரையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) 227 இடங்களில் வெற்றி பெற்று, அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 160 இடங்களிலும், எம்க்யூஎம்-பி கட்சி 45 இடங்களிலும் வென்றுள்ளன.